ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்க பக்ரைன் சம்மதம்- டிரம்ப் தகவல்


ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்க பக்ரைன் சம்மதம்- டிரம்ப் தகவல்
x
தினத்தந்தி 12 Sep 2020 8:14 PM GMT (Updated: 12 Sep 2020 8:14 PM GMT)

ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்குவதற்கு பக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளது

வாஷிங்டன், 

1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளும், அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலை புறக்கணித்து வந்தன. எனினும் 1979-ம் ஆண்டு எகிப்தும், 1994-ம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.

 இந்த சூழலில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துவரும் முயற்சியின் பலனாக இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே கடந்த மாதம் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்குவதற்கு பக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மற்றும் பக்ரைன் நாட்டின் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீபா ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக நடத்திய உரையாடலுக்கு பின் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த தகவலை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்க தருணம். நமது சிறந்த நண்பர்களான இஸ்ரேல் மற்றும் பக்ரைன் ஆகிய இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டன. 30 நாட்களில் இஸ்ரேலுடன் சமாதானம் செய்த 2-வது அரபு நாடு பக்ரைன். பிற அரபு நாடுகளும் இதை பின்பற்றும் என நான் நம்புகிறேன்” என கூறினார்.

வருகிற 15-ந் தேதி வெள்ளைமாளிகையில் நடைபெறும் விழாவில் இஸ்ரேல் மற்றும் பக்ரைன் இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அடுத்த கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தெரிகிறது.


Next Story