இத்தாலியில் கருப்பின வாலிபர் அடித்துக்கொலை-மக்கள் கொந்தளிப்பு


இத்தாலியில் கருப்பின வாலிபர் அடித்துக்கொலை-மக்கள் கொந்தளிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2020 9:00 PM GMT (Updated: 12 Sep 2020 9:00 PM GMT)

அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின வாலிபர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ரோம், 

அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின வாலிபர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கருப்பின வாலிபர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் ரோமின் புறநகர் பகுதியான கோலிபுரோ நகரைச் சேர்ந்த வில்லி மான்டீரோ துதர்தே என்கிற 21 வயது கருப்பின வாலிபரை வெள்ளை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் இத்தாலியை கடுமையாக உலுக்கியுள்ளது. பிரதமர் கியூசப் காண்டே உள்பட அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வில்லி மான்டீரோ துதர்தேவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பிரதமர் கியூசப் காண்டே மற்றும் அந்த நாட்டின் உள்துறை மந்திரி ஆகியோரும் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதனிடையே கருப்பின வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story