காங்கோ நாட்டில் பரிதாபம் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 50 பேர் பலி


காங்கோ நாட்டில் பரிதாபம் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 50 பேர் பலி
x
தினத்தந்தி 13 Sep 2020 12:00 AM GMT (Updated: 12 Sep 2020 10:34 PM GMT)

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கின்ஷாசா, 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கு பகுதியில் தங்கம் உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுத்து வருகின்றன. அதேசமயம் அந்த சுரங்கங்களில் முறையான பாதுகாப்பு கருவிகள் பயன்படுத்தப்படாததாலும், சில சுரங்கங்கள் முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்படுவதாலும் சுரங்கங்களில் விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்தநிலையில் காங்கோவின் கிழக்கு மாகாணம் கிவுவில் உள்ள கமிட்டுகா நகரில் கனடா நிறுவனத்துக்கு சொந்தமான தங்க சுரங்கத்தில் நேற்றுமுன்தினம் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.கமிட்டுகா நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும், அதற்கு மத்தியிலும் சுரங்க பணிகள் வழக்கம்போல் நடைபெற்று வந்ததாகவும் தெரிகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் இந்த தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தையடுத்து உடனடியாக போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

50 பேர் பலி

உள்ளூரை சேர்ந்த கிராம மக்களும் அவர்களுடன் சேர்ந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இடிபாடுகளில் இருந்து 50 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

விபத்தில் உயிரிழந்த அனைவரும் இளைஞர்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும் இடிபாடுகளில் சிக்கிய நபர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

முன்னதாக காங்கோவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போல் தங்க சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 16 பேரும், ஜூன் மாதம் காப்பர் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 43 பேரும் பலியானது நினைவுகூரத்தக்கது.

Next Story