ஆப்கானிஸ்தான் அரசு- தலீபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது


FIle Photo
x
FIle Photo
தினத்தந்தி 13 Sep 2020 12:04 AM GMT (Updated: 13 Sep 2020 12:04 AM GMT)

ஆப்கானிஸ்தானின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரும் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது

தோகா, 

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில் அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி கொண்டுவரப்பட்டது. ஆனால் தலீபான்களை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இதனால் 2001-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை அவர்கள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்கா, உள்நாட்டு போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருப்பது குறித்து கவலை தெரிவித்தது.

இதன் காரணமாக உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இரு தரப்புக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் நேரடி அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான உந்துகோலாக அமைந்தது.

ஆனால் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்தது.

எனினும் அந்த தடைகள் அனைத்தும் நீங்கி தற்போது இரு தரப்புக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

ஆப்கானிஸ்தானின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரும் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அரசு சார்பில் 21 பேரை கொண்ட பிரதிநிதிகள் குழு தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் பங்கேற்றுள்ளார்.

Next Story