ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனா உளவு பார்த்ததா?


ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனா உளவு பார்த்ததா?
x
தினத்தந்தி 14 Sep 2020 11:39 PM GMT (Updated: 15 Sep 2020 12:37 AM GMT)

இந்தியாவுடன் சமீப காலமாக அதிக மோதல் போக்கை சீனா கையாண்டு வருகிறது.

பெய்ஜிங்,

இந்தியாவுடன் சமீப காலமாக அதிக மோதல் போக்கை சீனா கையாண்டு வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுடனும் சீனா வரிந்து கட்டி நிற்கிறது. இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை வலுத்ததால், உளவு பார்க்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சீனாவுக்குச் சொந்தமான செல்போன் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சீனா உளவு பார்ப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின் படி,  சீனாவின் ஷென்சென் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஷென்ஹூவா தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சீன அரசுக்காக இந்தியா உட்பட பல நாடுகள் தொடர்பான தகவல்களை அளித்து வருகிறது எனவும்  இந்தியாவைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் குறித்த தகவல்களை அந்த நிறுவனம் திரட்டியதும் தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட நபரின் நெருங்கிய உறவினர்கள் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மட்டும் அல்லாது, உயர் அதிகாரிகள், நீதிபதிகள், விளையாட்டு பிரபலங்கள், தொழில் அதிபர்கள்  ஆகியோரையும் சீன உளவுத்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்டவற்றுடன் இணைந்து  ஷென்ஹூவா தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.   இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ள நிலையில் தகவல் போரை சீனா நடத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. 


Next Story