அமெரிக்க மாகாணங்களை புரட்டி போட்ட ‘சால்லி’ புயல்


அமெரிக்க மாகாணங்களை புரட்டி போட்ட ‘சால்லி’ புயல்
x
தினத்தந்தி 17 Sep 2020 10:45 PM GMT (Updated: 17 Sep 2020 7:38 PM GMT)

அமெரிக்க மாகாணங்களை ‘சால்லி’ புயல் புரட்டி போட்டுள்ளது.

வாஷிங்டன்,

காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன. அந்த வரிசையில் அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றிய ‘சால்லி’ என்ற சக்தி வாய்ந்த புயல் அமெரிக்காவின் அலபாமா மற்றும் புளோரிடா மாகாணங்களை நேற்று முன்தினம் தாக்கியது.

மணிக்கு 165 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்று காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின்கம்பங்கள் சரிந்தன; வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயல் காரணமாக அலபாமா மற்றும் புளோரிடா மாகாணங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடலில் நின்றுகொண்டிருந்த படகுகள் பல சாலைக்குத் தூக்கி வீசப்பட்டன. புயலைத் தொடர்ந்து 2 மாகாணங்களிலும் பேய் மழை கொட்டி தீர்த்தது. 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 61 செ.மீ அளவுக்குக் கனமழை கொட்டியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அலபாமா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் அதிகமானோர் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே புயல் தாக்கியதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இரு மாகாணங்களிலும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

Next Story