உஷார் நிலையில் ராணுவம்: பெலாரஸ் நாட்டின் மேற்கு எல்லைகள் மூடல் அதிபர் அதிரடி


உஷார் நிலையில் ராணுவம்: பெலாரஸ் நாட்டின் மேற்கு எல்லைகள் மூடல் அதிபர் அதிரடி
x
தினத்தந்தி 18 Sep 2020 8:24 PM GMT (Updated: 18 Sep 2020 8:24 PM GMT)

ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மின்ஸ்க்,

ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள், முடிவை ஏற்க மறுத்தன.

மேலும் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ பதவி விலகக்கோரி அங்கு கடந்த 6 வார காலமாக மக்கள் பெருமளவில் திரண்டு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டங்கள் மேற்கத்திய சக்திகளின் ஆதரவை பெற்று நடப்பதாக அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ குற்றம்சுமத்தி வருகிறார்.

இந்த நிலையில், அவர் அதிரடியாக நாட்டின் மேற்கு எல்லைகளை மூடுவதாக நேற்று அறிவித்துள்ளார். மேலும், வீதிகளில் இருந்து துருப்புகளை திரும்பப்பெற்று, ராணுவத்தை உச்சகட்ட உஷார் நிலையில் வைப்பதாகவும் கூறி உள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லிதுவேனியா, போலந்துடனான எல்லைகள் மூடப்பட்டாலும், உக்ரைனுடனான எல்லையை மேலும் வலுப்படுத்துவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் கூறும்போது, “எனது நாடு போரில் ஈடுபட விரும்பவில்லை. மேலும் பெலாரஸ், போலந்து, லிதுவேனியா ஆகியவை ராணுவ நடவடிக்கைகளின் அரங்காக மாறுவதையும் நான் விரும்பவில்லை. அதனால் எங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடாது” எனவும் குறிப்பிட்டார்.

Next Story