சீனாவுக்கு உளவு பார்த்ததாக அமெரிக்க காவல்துறை அதிகாரி கைது


சீனாவுக்கு உளவு பார்த்ததாக அமெரிக்க காவல்துறை அதிகாரி கைது
x

சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள திபெத்தியா்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நியூயார்க் நகர காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நியூயார்க் நகர காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தவா் பய்மதாஜீ ஆங்வாங் (33). இவா் திபெத்தை பூா்விகமாக கொண்டவா். அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள இவா் அமெரிக்காவில் உள்ள திபெத் சுதந்திர இயக்க ஆதரவாளா்களை சீன அரசுக்காக உளவு பார்த்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து பய்மதாஜீயை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து நியூயார்க் நகரில் திபெத் மக்களின் நடவடிக்கைகள் குறித்து சீன அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்து வந்துள்ளது தெரியவந்தது. நியூயார்க் நகர காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்த அவா், நியூயார்க்கில் உள்ள சீன துணைத் தூதரகத்தில் பணிபுரியும் 2 அதிகாரிகளுடன் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அவா் தொடா்பில் இருந்து வந்துள்ளார்.

இதுதொடா்பாக அமெரிக்க அரசு தரப்பு வழக்கறினர் கூறிய போது, “சீனாவில் இருந்து கலாச்சார நுழைவு விசாவில் அமெரிக்கா வந்தவா் ஆங்வாங். தனது 2-ஆவது நுழைவு விசா காலம் முடிந்த பின்னும் இந்நாட்டில் தங்கிய அவா், தான் திபெத்தியா் என்பதால் சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், இதனால் தனக்கு அமெரிக்காவில் புகலிடம் வேண்டும் எனவும் கூறி விண்ணப்பித்தார். அதன் பின்னா் அவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

Next Story