கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் குறைவு...!


கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் குறைவு...!
x
தினத்தந்தி 25 Sep 2020 3:34 PM GMT (Updated: 25 Sep 2020 3:34 PM GMT)

சமீபத்திய ஆய்வில் "கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கும் அபாயம் ஐந்து மடங்கு குறைவாக உள்ளது" என தெரியவந்துள்ளது.

பீஜிங்

ஜாமா (JAMA) கண் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி முடிவில், ஜனவரி 27 முதல் மார்ச் 13 வரை சீனாவின் சுய்ஜோ நகரில் உள்ள சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளை ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் 276 நோயாளிகளில், 16 நோயாளிகளுக்கு மயோபியா எனும் கண் பார்வை குறைபாடு இருந்தது. இதனால் அவர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கண்ணாடி அணிந்திருந்தார்கள்.

சீனாவின் 80% க்கும் அதிகமான மக்கள் மயோபியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது சீன நபர்களிடையே அனைத்து வயதினரும் கண் கண்ணாடி அணிவதை பொதுவானதாக மாற்றியது. இருப்பினும் 2019 டிசம்பரில் வுஹானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண் கண்ணாடி அணிந்தவர்கள் குறைவாக வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கண் கண்ணாடிகளை அணிந்த கொரோனா நோயாளிகள், கண்கண்ணாடி அணியாதவர்களுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் மிகக் குறைவு என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த கண்டுபிடிப்பு தினமும் கண்ணாடிகளை அணியும் நபர்கள் கொரோனாவுக்கு எளிதில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற முடிவுக்கு கொண்டு சென்றது.

தொற்றுநோய் பரவியதில் இருந்து உலக சுகாதார நிறுவனம் போன்ற உயர் நிறுவன மருத்துவ அதிகாரிகள், உடலில் வைரஸ் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதால் முகங்களை தொடுவதை தவிர்க்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவை வைரஸ் எளிதாக நுழையும் இடங்களாகும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த கண்டுபிடிப்புக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வு முடிவு, கொரோனாவில் இருந்து காக்க, கண்களை பாதுகாக்க பொதுவெளியில் வரும்போது கண்ணாடியோ, ஷீல்டோ அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வர தூண்டுகிறது. ஆனால் தொற்றுநோயியல் கண்ணோட்டத்தில், ஒரு ஒற்றை ஆய்வின் முடிவுதான் இது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் கண்ணாடிகள், அசுத்தமான கைகளில் இருந்து கொரோனா பரவலுக்கு எதிராக தடையாக செயல்படக்கூடும் என ஒப்புக்கொண்டுள்ளார்.

Next Story