கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி திறன்: அடுத்த ஆண்டு 100 கோடி அளவுகளில் முதலிடம் பெறும் -சீனா பெருமை


கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி திறன்:  அடுத்த ஆண்டு 100 கோடி அளவுகளில் முதலிடம் பெறும் -சீனா பெருமை
x
தினத்தந்தி 25 Sep 2020 4:26 PM GMT (Updated: 25 Sep 2020 4:26 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான ஆண்டு உற்பத்தி திறன் அடுத்த ஆண்டு 100 கோடி அளவுகளில் முதலிடம் பெறும் என்று சீன சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

பீஜிங்

சீனாவின் கேன்சினோ பயாலஜிக்ஸ் என்ற உயர்தொழில் நுட்ப மருந்து நிறுவனம், ராணுவ அறிவியல் குழுவினருடன் இணைந்து  ஏடி 5 - என்கோபவ் (Ad5-nCoV) என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை ரஷிய நாட்டில் அங்குள்ள பெட்ரோவேக்ஸ் என்ற மருந்து நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பில் பெட்ரோவேக்ஸ் மருந்து நிறுவனம் கூறுகையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர்கள் தற்போது நன்றாக உள்ளனர்.

அவர்களில் யாருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்கள் எங்களது நேரடி பார்வையில் ஒரு மாத காலம் வைத்திருக்கப்படுவார்கள்.

4 இடைக்கால பரிசோதனைகள் நடைபெறும். 6 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி, சீனாவின் இந்த தடுப்பூசியை ரஷியா முறைப்படி பதிவு செய்தவுடன், மாதம் ஒன்றுக்கு 4 மில்லியன் டோஸ் தடுப்பூசியை இந்த ஆண்டு தயாரிக்க முடியும்.அடுத்த ஆண்டில் மாதம் 10 மில்லியன் தடுப்பூசி தயாரிக்க இயலும் என்றும் பெட்ரோவேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான சீனாவின் ஆண்டு உற்பத்தி திறன் அடுத்த ஆண்டு 100 கோடி அளவுகளில் முதலிடம் பெறும் என்று சீன சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திறன் 61.0 லட்சம் அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவர் ஜெங் ஜாங்வே தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது தடுப்பூசிகளை விநியோகத்தில் மருத்துவத் தொழிலாளர்கள், எல்லைப் பணியாளர்கள் மற்றும் முதியவர்கள் போன்ற குழுக்களுக்கு பொது மக்களுக்கு கிடைக்குமுன் முன்னுரிமை அளிக்கப்படும்.

சீனாவில் மனித சோதனைகளில் 11 தடுப்பூசிகள் உள்ளன, அவைகளில் நான்கு தற்போது மூன்றாவது மற்றும் இறுதி சோதனை கட்டத்தை எட்டி உள்ளன என கூறினார்.

அமெரிக்க மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகியவை 2021 ஆம் ஆண்டில் தலா 100 கோடி அளவை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Next Story