உலக செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு மத்தியில் காரில் உலா வந்து ஆதரவாளர்களை உற்சாகப்படுத்திய ஜனாதிபதி டிரம்ப்; எதிர்க்கட்சியினர் விமர்சனம் + "||" + President Trump cheering supporters on a car ride amid Corona treatment; Opposition Criticism

கொரோனா சிகிச்சைக்கு மத்தியில் காரில் உலா வந்து ஆதரவாளர்களை உற்சாகப்படுத்திய ஜனாதிபதி டிரம்ப்; எதிர்க்கட்சியினர் விமர்சனம்

கொரோனா சிகிச்சைக்கு மத்தியில் காரில் உலா வந்து ஆதரவாளர்களை உற்சாகப்படுத்திய ஜனாதிபதி டிரம்ப்; எதிர்க்கட்சியினர் விமர்சனம்
கொரோனா சிகிச்சைக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காரில் உலா வந்து தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார். இதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வாஷிங்டன்,

உலகை உலுக்கி வரும் உயிர்கொல்லி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஆனாலும் இந்த கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அங்கு வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

இதற்காக டிரம்ப் நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களுக்கு சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவருக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை வால்டர் ரீட் தேசிய ராணுவ ஆஸ்பத்திரியில் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டே அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார். டிரம்ப் சிகிச்சை பெற்று வரும் ராணுவ ஆஸ்பத்திரிக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை டிரம்ப் திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து, காரில் வலம் வந்தார். காருக்குள் முக கவசம் அணிந்து அமர்ந்திருந்த டிரம்ப் ஆஸ்பத்திரியின் வெளியே நின்றிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தவாறு சென்றார்.

டிரம்பின் திடீர் வருகையால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் கரவொலி எழுப்பி டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக டிரம்ப் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்படுவதற்கு முன் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “என் நாட்டு தேசப்பற்று மிக்க மக்களுக்கும், நீண்டநேரமாக சாலையில் நின்று இருக்கும் மக்களுக்கும் நான் சிறிய வியப்பு அளிக்கும் வகையில் அவர்களை சந்திக்கப் போகிறேன்” என தெரிவித்திருந்தார்.

வீதி உலாவை முடித்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு திரும்பிய பின்னர் டிரம்ப் மற்றொரு வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டார்.

அதில் அவர் “எனக்கு இது வித்தியாசமான பயணமாக அமைந்திருந்தது. ஆஸ்பத்திரி எனும் உண்மையான பள்ளிக்கூடத்துக்கு வந்து கொரோனா வைரஸ் பற்றி அதிகமான பாடங்களைக் கற்றுக்கொண்டேன், புரிந்துகொண்டேன். என்னைக் கவனித்துக்கொண்ட மருத்துவர்களின் பணி அளப்பரியது” எனக் கூறினார்.

சிகிச்சை முடிவதற்கு முன்பே டிரம்ப் காரில் உலா வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜனாதிபதி கொரோனா கட்டுபாடுகளையும் மருத்துவ நடைமுறைகளையும் மீறிவிட்டதாக ஜனநாயக கட்சியினரும், மூத்த மருத்துவ நிபுணர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.