மெக்சிகோவில் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்தை அறுத்து படுகொலை; போதைப்பொருள் கும்பல் வெறிச்செயல்


மெக்சிகோவில் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்தை அறுத்து படுகொலை; போதைப்பொருள் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 6 Oct 2020 10:50 PM GMT (Updated: 6 Oct 2020 10:50 PM GMT)

மெக்சிகோவில் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்தை அறுத்து போதைப்பொருள் கும்பல் படுகொலை செய்துள்ளது.

மெக்சிகோ சிட்டி,

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகம். இந்த கும்பல்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுவது அங்கு வெகுசாதாரணம். இந்தநிலையில் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் வில்லா டி ரமோஷ் என்கிற நகரில் உள்ள சாலையில் 2 வேன்கள் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தன. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வேன்களை சோதனையிட்டபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. 2 வேன்களிலும் தலா 6 பிணங்கள் கிடந்தன. 2 பெண்கள் உள்பட 12 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.

அவர்கள் அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் பிணங்கள் கிடந்த ஒரு வேனில் இருந்து எடுக்கப்பட்ட துண்டுச்சீட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தொழில் போட்டியில் அவர்கள் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story