டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்த மாட்டேன் - ஜோ பைடன் சொல்கிறார்


டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்த மாட்டேன் - ஜோ பைடன் சொல்கிறார்
x
தினத்தந்தி 8 Oct 2020 12:15 AM GMT (Updated: 7 Oct 2020 7:05 PM GMT)

டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்த மாட்டேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடந்த மாதம் 29-ந்தேதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் காரசாரமாக விவாதம் நடத்தினர்.

இந்த சூழலில் ஜனாதிபதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட டிரம்ப் 4 நாட்களுக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இதனிடையே டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையிலான 2-வது நேரடி விவாதம் வருகிற 15-ந்தேதி புளோரிடா மாகாணத்தில் நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போது இதுகுறித்து ஜோ பைடன் பேசியதாவது:-

ஜனாதிபதி டிரம்பின் தற்போதைய உடல்நலம் குறித்த தகவல் என்னிடம் இல்லை. அவருக்கு இன்னும் கொரோனா தொற்று இருந்தால் விவாதம் நடக்கக்கூடாது. பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. நான் தொடர்ந்து மருத்துவரின் வழிகாட்டுதலின்படி நடந்து வருகிறேன். டிரம்புடன் விவாதிக்க நான் ஆவலாக இருக்கிறேன். ஆனால் எல்லா நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். அதேசமயம் தான் நலமாக இருப்பதாகவும் நேரடி விவாதத்துக்கு தயாராக உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Next Story