டிரம்ப் உடல் நலம் : வெள்ளை மாளிகை ஏன் உண்மையை மறைக்க வேண்டும்: சபாநாயகர் நான்சி பெலோசி


டிரம்ப் உடல் நலம் : வெள்ளை மாளிகை ஏன் உண்மையை மறைக்க வேண்டும்:  சபாநாயகர் நான்சி பெலோசி
x
தினத்தந்தி 9 Oct 2020 5:24 AM GMT (Updated: 9 Oct 2020 5:24 AM GMT)

ஏன் வெள்ளை மாளிகை உண்மையை மறைக்க வேண்டும் ; நாட்டு மக்களுக்கு தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது என அமெரிக்கா பாராளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி கேட்டுள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பதவியை பறிக்கும் நடவடிக்கைகளை நாளை முதல் துவங்க இருப்பதாக சபாநாயகர் நான்சி பெலோசி மிரட்டல் விடுத்துள்ளார்.

வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பெலோசியிடம், 25-வது சட்ட திருத்தத்தை அமுலுக்கு கொண்டு வருவது சரியான தருணம் இதுவென கருதுகிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பெலோசி, இந்த விவகாரம் தொடர்பில் விரிவாக நாளை பேசலாம். இன்று இது குறித்து நான் எதுவும் பேசப்போவதில்லை என்றார்.

25-வது சட்ட திருத்தம் என்பது, அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து மொத்த பொறுப்பையும் துணை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க கோருவதாகும். இதனிடையே, ஜனாதிபதி டிரம்பின் கொரோனா சிகிச்சை மற்றும் குணமடைந்த தகவல் தொடர்பிலும் பெலோசி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக கொரோனாவுக்கு இலக்காகி வரும் நிலையில், ஏன் வெள்ளை மாளிகை உண்மையை மறைக்க வேண்டும் எனவும், நாட்டு மக்களுக்கு தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது எனவும் பெலோசி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனாவுக்கு ஜனாதிபதி டிரம்ப் இலக்காகியுள்ள நிலையில், இதுவரை அவர் தனது பொறுப்புகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. அந்த ஒருவார காலமும், ஜனாதிபதி டிரம்ப் வால்டர் ரீட் மருத்துவமனையில் இருந்தே அலுவலக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஜனாதிபதி உடல் நலம் குன்றி இக்கட்டான நிலையில் இருக்கும் போது, தமது பொறுப்புகளை துணை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே 25-வது சட்ட திருத்தம். இதற்காக, சபாநாயகருக்கு ஜனாதிபதி கைப்பட ஒரு கடிதம் எழுத வேண்டும்.

பின்னர் தமது அலுவலக பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி தயாரானதும், மீண்டும் ஒரு கடிதம் சபாநாயகருக்கு எழுத, பொறுப்புகளை திரும்ப ஒப்படைக்க அவர் துணை ஜனாதிபதிக்கு உத்தரவிடுவார்.

துணை ஜனாதிபதி பதவி காலியாக இருந்தால், ஜனாதிபதியே, ஒருவரை துணை ஜனாதிபதியாக பரிந்துரைப்பார். அவருக்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளின் பெரும்பான்மை ஆதரவு இருந்தால், நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கலாம்.

தற்போது நாட்டின் துணை ஜனாதிபதிக்கு பின்னர் அந்த பொறுப்பில் வர தகுதியானவராக நான்சி பெலோசி முன்னணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story