ஆப்கானிஸ்தானில் தொடரும் தலீபான்கள் தாக்குதல்; 3 வீரர்கள் மரணம்


ஆப்கானிஸ்தானில் தொடரும் தலீபான்கள் தாக்குதல்; 3 வீரர்கள் மரணம்
x
தினத்தந்தி 9 Oct 2020 8:27 AM GMT (Updated: 9 Oct 2020 8:27 AM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் மரணம் அடைந்து உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெல்மாண்ட் நெடுஞ்சாலை மற்றும் நாஹ்ரி சராஜ் மாவட்டம் ஆகிய இரு வேறு பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் மரணம் அடைந்து உள்ளனர்.  3 பேர் காயமடைந்து உள்ளனர்.  இதனை ஹெல்மாண்ட் ஆளுநரின் செய்தி தொடர்பு அதிகாரி உமர் ஜிவாக் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதேபோன்று கடந்த புதன்கிழமை இரவில் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் தலீபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதில் படை வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.  6 பேர் காயமடைந்தனர்.

இதன் பின்னர் அங்கிருந்த 15 பேரை தலீபான் பயங்கரவாதிகள் சிறை பிடித்து சென்று விட்டனர்.  அதனுடன், தாக்குதலுக்கு பின்னர் வீரர்களின் வாகனம் ஒன்றையும் மற்றும் சில ஆயுதங்களையும் அவர்கள் திருடி சென்று விட்டனர்.  இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு புறம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், அதில் முடிவு எட்டப்படாத நிலையில் மறுபுறம் பயங்கரவாதிகள் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story