உலகைச் சுற்றி....


உலகைச் சுற்றி....
x
தினத்தந்தி 12 Oct 2020 9:45 PM GMT (Updated: 12 Oct 2020 8:03 PM GMT)

மைக்ரோசாப்டு’ குறிப்பிட்ட சில பணியாளர்கள் விரும்பினால் அவர்கள் நிரந்தரமாகவே வீட்டிலிருந்து பணியாற்றலாம் என தற்போது அறிவித்துள்ளது.

* அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு நிறுவனமான ‘மைக்ரோசாப்டு’ கொரோனா காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றி வரும் தங்கள் ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி வரை அலுவலகத்துக்கு வர வேண்டாம் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், குறிப்பிட்ட சில பணியாளர்கள் விரும்பினால் அவர்கள் நிரந்தரமாகவே வீட்டிலிருந்து பணியாற்றலாம் என தற்போது அறிவித்துள்ளது.

* ஈரானில் கடந்த சில நாட்களாக கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 272 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அங்கு கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ளது.

* ரஷியாவின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளுக்கு இடையிலான சண்டை நிறுத்தம் மீறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நாகோர்னாகராபாக் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தியதாக இருநாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன.

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் சிறப்பு உதவியாளராக இருந்து வந்த அசிம் சலீம் பஜ்வா, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

* வங்காளதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெனி மாவட்டத்தில் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

* ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள அஹ்வாஸ் நகரில் 2 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் கேஸ் கசிவு காரணமாக பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Next Story