ஆப்கானிஸ்தானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 9 வீரர்கள் பலி


ஆப்கானிஸ்தானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 9 வீரர்கள் பலி
x
தினத்தந்தி 14 Oct 2020 11:30 PM GMT (Updated: 14 Oct 2020 11:05 PM GMT)

ஆப்கானிஸ்தானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் தலீபான் பயங்கரவாத அமைப்புடன் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு தலீபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தீவிர முயற்சிகளை எடுத்தது.

இதன் பலனாக கத்தார் தலைநகர் தோகாவில் ஆப்கானிஸ்தான் அரசும், தலீபான் பயங்கரவாத அமைப்பும் கடந்த ஒரு மாத காலமாக அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

அமைதி பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அங்கு தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மாகாண தலைநகர் லஷ்கர் காவை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தலீபான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம் தலீபான் பயங்கரவாதிகளின் இந்த சதி முயற்சியை முறியடிக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் அவர்களுடன் கடுமையாக போராடி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் லஷ்கர் கா நகரில் ராணுவ சோதனைச்சாவடியை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த ராணுவ வீரர்களை ஆஸ்பத்திரி கொண்டு செல்வதற்காக 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன.

அதன்படி ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான சோவியத் காலத்து ‘எம்ஐ21’ ரக ஹெலிகாப்டர்கள் படுகாயம் அடைந்த ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றன. கிளம்பிய சிறிது நேரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென 2 ஹெலிகாப்டர்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

இதில் 2 ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் 2 ஹெலிகாப்டர்களிலும் இருந்த 9 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

இதுபற்றி விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் ஓமர் ஸ்வாக் தெரிவித்தார்.


Next Story