இன்னும் ஒரு மாதத்துக்குள் 3-வது தடுப்பூசியை ரஷியா பதிவு செய்யும்: தேசிய சுகாதார அமைப்பு தலைவர் தகவல்


இன்னும் ஒரு மாதத்துக்குள் 3-வது தடுப்பூசியை ரஷியா பதிவு செய்யும்: தேசிய சுகாதார அமைப்பு தலைவர் தகவல்
x
தினத்தந்தி 15 Oct 2020 11:00 PM GMT (Updated: 15 Oct 2020 8:44 PM GMT)

இன்னும் ஒரு மாதத்துக்குள் 3-வது தடுப்பூசியை ரஷியா பதிவு செய்யும் என்று தேசிய சுகாதார அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ, 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக உள்ளன. இதில் ரஷியா தயாரித்த ‘ஸ்புட்னிக் வி’ என்ற தடுப்பூசியை முதல் நாடாக அந்த நாடு பதிவு செய்தது. ரஷியாவின் கமாலயா நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை பரிசோதிப்பதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதைத்தொடர்ந்து ரஷியாவின் வெக்டர் சென்டர் உருவாக்கிய தடுப்பூசி ஒன்றை பதிவு செய்துள்ளதாக அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதைப்போல 3-வது தடுப்பூசியை ரஷியாவால் விரைவில் பதிவு செய்ய முடியும் என அந்த நாட்டு தேசிய பொது சுகாதார மேற்பார்வை அமைப்பு தெரிவித்து உள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் அன்னா போபோவா கூறுகையில், ‘ரஷியாவிடம் 2 தடுப்பூசிகள் உள்ளன. இதைத்தவிர 3-வது தடுப்பூசி இன்னும் ஒரு மாதத்தில் பதிவு செய்யப்படும் என்பதை நான் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

ரஷியாவின் சுமாகோவ் பெடரல் அறிவியல் மையம் தயாரித்த தடுப்பூசி ஒன்று 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story