ஏமன் நாட்டில் 2 அமெரிக்க பிணைக்கைதிகள் விடுதலை


ஏமன் நாட்டில் 2 அமெரிக்க பிணைக்கைதிகள் விடுதலை
x
தினத்தந்தி 15 Oct 2020 11:08 PM GMT (Updated: 15 Oct 2020 11:08 PM GMT)

ஏமன் நாட்டில் 2 அமெரிக்க பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

சனா, 

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும் இடையே 2014-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7-வது ஆண்டாக நீடிக்கிறது.

இதற்கிடையே அமெரிக்காவை சேர்ந்த மனித நேய பணியாளர் சாண்ட்ரா லோலியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்து 3 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்தனர். இதேபோன்று அமெரிக்க தொழில் அதிபர் மைக்கேல் கிடாடாவையும் ஒரு வருடத்துக்கு மேலாக தங்கள் பிடியில் பிணைக்கைதியாக வைத்திருந்தனர்.

இப்போது அவர்கள் இருவரையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் விடுதலை செய்து விட்டனர். இதை அமெரிக்க அரசு அதிகாரிகள் உறுதி செய்தனர்.

மேலும், அங்கு கொல்லப்பட்ட அமெரிக்க பிணைக்கைதியான பிலால் பதீனின் உடலையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர்.

ஓமனில் மருத்துவ சிகிச்சைக்காக சென்று, தவித்து வந்த 200-க்கும் மேற்பட்ட ஏமன் நாட்டினர் விடுவிக்கப்பட்டு, திரும்ப அனுப்பப்பட்டதை தொடர்ந்து இந்த விடுதலை நடவடிக்கையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எடுத்து இருக்கிறார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க பிணைக்கைதிகள் 2 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை வரவேற்றுள்ளது.


Next Story