மாணவர்களின் போராட்டங்களை தடுக்க தாய்லாந்தில் அவசர நிலை அமல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை


மாணவர்களின் போராட்டங்களை தடுக்க தாய்லாந்தில் அவசர நிலை அமல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2020 11:30 PM GMT (Updated: 15 Oct 2020 11:30 PM GMT)

தாய்லாந்து நாட்டில் மாணவர்கள் நடத்தி வருகிற ஜனநாயக ஆதரவு போராட்டங்களை தடுக்கிற வகையில் பிரதமர் ஓச்சா அவசர நிலையை அமல்படுத்தி உள்ளார்.

பாங்காக், 

தாய்லாந்து நாட்டில் 2014-ம் ஆண்டு ராணுவ தளபதியாக இருந்த பிரயுத் சான் ஓச்சா, புரட்சி நடத்தி ஆட்சியை கவிழ்த்தார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். கடந்த ஆண்டு நடந்த சர்ச்சைக்குரிய தேர்தலுக்கு பின்னர் அவர், அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார்.

ஆனால் அவருக்கு எதிராக மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் பெரும் சக்தியாக உருவெடுத்தது.

பிரதமர் ஓச்சா பதவி விலக வேண்டும், புதிய அரசியல் சாசன சட்டம் இயற்றப்படவேண்டும், முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இது பிரதமர் ஓச்சாவுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது.

நேற்று முன்தினம், பிரதமர் ஓச்சா பதவி விலகக்கோரி நடந்த பெரிய அளவிலான போராட்டங்களால் பாங்காக் திணறியது. இந்த போராட்டங்கள், 1973-ம் ஆண்டு நடந்த மாணவர்கள் எழுச்சியின் 47-வது நினைவுதினத்தை நினைவுகூரும் வகையில் அமைந்தன.

இந்த போராட்டத்தின்போது, அந்த நாட்டின் ராணி சென்ற வாகனத்தையும், பாதுகாப்பு வாகனங்களையும் போராட்டக்காரர்கள் சூழ்ந்து, 3 விரல்களை காட்டி கோஷங்களை முழங்கினர். அவர்களை போலீசார் துரத்தியடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிற போராட்டங்களை தடுக்கிற வகையில் ஓச்சா அரசு அங்கு அவசர நிலையை அதிரடியாக அறிவித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை போலீசார் டெலிவிஷனில் வெளியிட்டனர்.

அதைத் தொடர்ந்து நேற்று உள்ளூர் நேரப்படி காலை 4 மணிக்கு அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது.

அங்கு 5 பேரோ அதற்கு கூடுதலான நபர்களோ கூடுவதற்கு அவசர நிலை தடை விதித்துள்ளது. மக்களிடையே உணர்வை தூண்டும் செய்திகளை மின்னணு சாதனங்களில் வெளியிடவும் தடை வந்துள்ளது.

அவசர நிலை அமலுக்கு வந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் போலீஸ் இறங்கி உள்ளது. 3 முக்கிய போராட்ட தலைவர்கள் உள்ளிட்ட ஜனநாயக ஆர்வலர்கள் பலரையும் போலீஸ் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

20 பேரை கைது செய்திருப்பதாக அறிவித்த போலீசார், அவர்களது பெயர் விவரத்தை வெளியிடவில்லை.

இருப்பினும் முக்கிய போராட்ட தலைவர்களான அனோன் நம்பா, மாணவர் ஆர்வலர் பரித் சிவாரக், பானுசயா சிதிஜிராவட்டனகுல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அனோன் நம்பாதான் முதன் முதலாக கடந்த ஆகஸ்டு மாதம், சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்ததின் மூலமாக முடியாட்சியை பற்றி விவாதிப்பதற்கான தடையை வெளிப்படையாக உடைத்தவர். அந்த மாதத்தின் பிற்பகுதியில் அரசு சீர்திருத்தத்தை வலியுறுத்தி 10 அம்ச அறிக்கையை வெளியிட்டதில் இருந்து பானுசயா, போராட்டங்களில் முக்கிய முகமாக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story