பாங்காக்கில் அவசர நிலையை மீறி போராட்டம்; போலீசார் எச்சரிக்கை


பாங்காக்கில் அவசர நிலையை மீறி போராட்டம்; போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2020 7:03 AM GMT (Updated: 16 Oct 2020 7:03 AM GMT)

பாங்காக்கில் அவசர நிலையை மீறி ஆயிரகணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் மற்றும் இளைஞர்களை போலீசார் எச்சரித்து உள்ளனர்.

பாங்காக்

தாய்லாந்து நாட்டில் 2014-ம் ஆண்டு ராணுவ தளபதியாக இருந்த பிரயுத் சான் ஓச்சா, புரட்சி நடத்தி ஆட்சியை கவிழ்த்தார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். கடந்த ஆண்டு நடந்த சர்ச்சைக்குரிய தேர்தலுக்கு பின்னர் அவர், அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார்.

ஆனால் அவருக்கு எதிராக மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் பெரும் சக்தியாக உருவெடுத்தது.

பிரதமர் ஓச்சா பதவி விலக வேண்டும், புதிய அரசியல் சாசன சட்டம் இயற்றப்படவேண்டும், முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இது பிரதமர் ஓச்சாவுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது.

நேற்று முன்தினம், பிரதமர் ஓச்சா பதவி விலகக்கோரி நடந்த பெரிய அளவிலான போராட்டங்களால் பாங்காக் திணறியது. இந்த போராட்டங்கள், 1973-ம் ஆண்டு நடந்த மாணவர்கள் எழுச்சியின் 47-வது நினைவுதினத்தை நினைவுகூரும் வகையில் அமைந்தன.

இந்த போராட்டத்தின்போது, அந்த நாட்டின் ராணி சென்ற வாகனத்தையும், பாதுகாப்பு வாகனங்களையும் போராட்டக்காரர்கள் சூழ்ந்து, 3 விரல்களை காட்டி கோஷங்களை முழங்கினர். அவர்களை போலீசார் துரத்தியடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிற போராட்டங்களை தடுக்கிற வகையில் ஓச்சா அரசு அங்கு அவசர நிலையை அதிரடியாக அறிவித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை போலீசார் டெலிவிஷனில் வெளியிட்டனர்.

தாய்லாந்தில் அவசரநிலையை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பாங்காக்கில் தெருக்களில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பாங்காக்கில் நேற்று 10,000 போராட்டக்காரர்கள் இருந்தனர். அவர்கள் அனைவர் மீதும் வழக்குத் தொடரபடும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவின் அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.

பெரிய அளவிலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில்,முக்கிய போராட்ட தலைவர்களான அனோன் நம்பா, மாணவர் ஆர்வலர் பரித் சிவாரக், பானுசயா சிதிஜிராவட்டனகுல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்புதேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொள்வதாக அர்னான் கூறினார். அதே நேரத்தில்  போராட்டக்காரர்களை தொடர்ந்து போராடுமாறு வலியுறுத்தினார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை எச்சரிக்க நான் விரும்புகிறேன், இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பது எதிர்காலத்தில் உங்களை பாதிக்கும் என பாங்காக் காவல்துறையின் துணைத் தலைவர் பியா தவிச்சாய் கூறினார்.

கைதிகளின் உரிமைகளை மதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தாய்லாந்தை வலியுறுத்தியுள்ளது.
 

Next Story