அதிக அளவு ஆயுதங்களை விற்பனை செய்வோம் : ஆயுத தடை விலகிய நிலையில் ஈரான் அறிவிப்பு


அதிக அளவு ஆயுதங்களை விற்பனை செய்வோம் : ஆயுத தடை விலகிய நிலையில் ஈரான் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2020 6:30 PM GMT (Updated: 19 Oct 2020 6:30 PM GMT)

தங்கள் நாட்டின் மீதான ஐ.நா. ஆயுத தடை காலாவதியாகி விட்டதாக ஈரான் நேற்று அறிவித்தது.

தெஹ்ரான்,

மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா. ஆயுத தடையை விதித்தது. இதன் மூலம் ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. 

எனினும் அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் ஈரான் மீதான ஆயுத தடை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காலாவதியாகும் என ஐ.நா. உறுதி அளித்திருந்தது.

இதற்கிடையே ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை காலவரையின்றி நீட்டிக்க அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எந்த நாடும் ஆதரவு அளிக்காததால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்தநிலையில் தங்கள் நாட்டின் மீதான ஐ.நா. ஆயுத தடை காலாவதியாகி விட்டதாக ஈரான் நேற்று அறிவித்தது. 

இந்த நிலையில்,  இன்று (திங்கள் கிழமை) தெஹ்ரானில் பேட்டி அளித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், ஆயுத சந்தையில் கொள்முதல் செய்வதற்கு பதிலாக நாங்கள் இனி அதிக அளவு ஆயுதங்களை விற்போம். ஈரானிடம் அதற்கான திறன் உள்ளது.  பொறுப்புடன் செயல்பட்டு பிற நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வோம்” என்றார். 


Next Story