திபெத் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு


திபெத் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Oct 2020 9:38 PM GMT (Updated: 20 Oct 2020 9:38 PM GMT)

திபெத் விவகாரங்கள் முற்றிலும் எங்கள் நாட்டின் உள்விவகாரம் என சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங், 

திபெத் தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என சீனா தொடர்ந்து கூறிவருகிறது.  திபெத் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்து வரும் அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்பு திபெத் விவகாரங்களை கவனிப்பதற்கென சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமித்தது.

அமெரிக்காவின் மூத்த தூதரக அதிகாரியான ராபர்ட் டெஸ்ட்ரோ திபெத் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக கடந்த 15-ந்தேதி நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமெரிக்காவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் டெஸ்ட்ரோ திபெத் அரசின் தலைவர் லோப்சங் சங்கேவை நேரில் சந்தித்து பேசினார்.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் “திபெத் விவகாரங்கள் முற்றிலும் சீனாவின் உள் விவகாரங்கள் ஆகும். எந்த வெளி சக்திகளும் அவற்றில் தலையிடாது. திபெத்திய பிரச்சினைகளுக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் என்று அழைக்கப்படுவது சீனாவில் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கும் திபெத்தின் ஸ்திரத்தன்மையை நாசப்படுத்துவதற்கும் ஒரு அரசியல் நடவடிக்கையாகும். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டோம். இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்தார். 


Next Story