அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப் - ஜோ பிடன் இடையே இறுதி கட்ட நேருக்கு நேர் விவாதம்


அமெரிக்க அதிபர் தேர்தல்;  டிரம்ப் - ஜோ பிடன் இடையே இறுதி கட்ட நேருக்கு நேர் விவாதம்
x
தினத்தந்தி 23 Oct 2020 1:31 AM GMT (Updated: 23 Oct 2020 1:31 AM GMT)

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனாவே காரணம் காரணம் என டிரம்ப் கூறினார்.

நாஷ்வில் டென்னஸி,

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள குடியரசு கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் நேருக்கு நேராக தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர்.  அதிபர் தேர்தலுக்கு முன்பாக இறுதி கட்ட நேருக்கு நேர் இதுவாகும்.  விவாதத்தின் தொடக்கத்தில் பேசிய டிரம்ப், “  பல மாகாணங்களில் தொற்று குறைந்து வருகிறது.  இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கிடைத்துவிடும். 

சில நிறுவனங்களின் தடுப்பூசி சோதனையில் நல்ல  முன்னேற்றம் உள்ளது.  அமெரிக்காவில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்து உள்ளது.  அரசின் தடுப்பு நடவடிக்கை மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் வந்த போது ஜோ பிடன் என்ன செய்தார்? ஜோ பிடன் போல என்னால் முடங்கி இருக்க முடியாது. ராணுவ குடும்பங்கள் உள்பட பல குடும்பங்களை சந்தித்து வருகிறேன். நோய் பாதித்த 99 சதவிதம் பேர் குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனாவே காரணம்.  நாட்டை முடக்கிய போது தவறு எனக்கூறியவர் ஜோ பிடன். தற்போது முன் கூட்டியே ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் எனக்கூறுகிறார். ஊரடங்கை தவிர்த்து ஜோ பிடனுக்கு எதுவும் தெரியாது.  அதிக தளர்வுகள் கொடுத்தால்தான் பொருளாதாரம் வளரும். ஊரடங்கால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு முன் இதை எதிர்கொண்டது இல்லை. 

பின்னர் பேசிய ஜோ பிடன் கூறுகையில், “  நோயுடன் வாழ பழகிக்கொண்டு விட்டோம் என டிரம்ப் கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் உள்ளது?  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த டிரம்பிடம் எந்த திட்டமும் இல்லை. கொரோனா வைரசை முடக்குவதே எங்களது திட்டம். நாட்டை அல்ல. டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. தளர்வுகளை வழங்கும் அரசு, வைரஸ் பரவலை தடுக்க வழிமுறைகளை கையாளவில்லை. 

டிரம்ப் எதற்காக மாஸ்க் அணிய மறுக்கிறார்.ஜனவரி மாதமே கொரோனா பற்றி தெரிந்து இருந்தும் ஏன் சொல்லவில்லை.  கொரோனா வைரஸ் பெரிய பிரச்சினையே இல்லை என டிரம்ப் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்க தேர்தலில் தலையீட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ரஷ்யாவை பற்றி மட்டும் டிரம் ஏன் பேச மறுக்கிறார். அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இரு தலைவர்களும் மேற்கூறியவாறு காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story