ரெம்டெசிவிர் மருந்து உபயோகத்திற்கு முன் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; இந்திய மருத்துவர்கள்


ரெம்டெசிவிர் மருந்து உபயோகத்திற்கு முன் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; இந்திய மருத்துவர்கள்
x
தினத்தந்தி 24 Oct 2020 12:35 AM GMT (Updated: 24 Oct 2020 12:35 AM GMT)

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை உபயோகிப்பதற்கு முன் பரிசோதனை செய்து கொள்ளும்படி இந்திய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வாஷிங்டன்,

கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிய பின்னர் அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் என்ற வைரஸ் தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.  கடந்த மே மாதம் அந்நாட்டில் இந்த மருந்துக்கு நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் இந்த மருந்துக்கு முழு ஒப்புதலை வழங்கியது.  இதன்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும்.

அமெரிக்காவில் இந்த மருந்துக்கு முழு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், இந்திய மருத்துவர்கள் அதனை உபயோகப்படுத்துவதற்கு முன் சோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.  இந்தியாவில், மருத்துவமனையில் சேர்ந்து கொரோனா சிகிச்சை பெறும் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு வழங்குவதற்கு ஏற்ற சிகிச்சை முறையாக இந்த மருந்துகளை மருத்துவர்கள் முழுவதும் ஏற்று கொள்ளவில்லை.

ஏனெனில் இந்த மருந்துகள் உயிரிழப்புகளை குறைப்பதிலோ அல்லது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் காலஅளவை குறைப்பதிலோ பெரும் பங்கு வகிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட பரிசோதனை முடிவில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதனால், இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதற்கு பதிலாக இந்த மருந்துகளை கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.  இந்த மருந்துகளை கொரோனா நோயாளிகளின் அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்த மட்டுமே இந்தியாவில் இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

Next Story