பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக குற்றச்சாட்டு: அமெரிக்காவில் போலி பாதிரியாருக்கு 120 ஆண்டுகள் சிறை


பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக குற்றச்சாட்டு: அமெரிக்காவில் போலி பாதிரியாருக்கு 120 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 28 Oct 2020 11:25 PM GMT (Updated: 28 Oct 2020 11:25 PM GMT)

அமெரிக்காவில் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட போலி பாதிரியாருக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த 60 வயதான கேத் ரானியர் என்ற போலி பாதிரியார் ‘நெக்சிவிம்’ என்ற அமைப்பை நடத்தி வந்தார். இந்த அமைப்புக்கு பெரும் பணக்காரர்களும், பிரபலமானவர்களும் நிதி அளித்து வந்தனர். இந்தநிலையில் கேத் ரானியர் தனது அமைப்பில் சேரும் பெண்களுக்கு சரியாக உணவு வழங்காமல் கொடுமைப்படுத்தி அவர்களது உடலில் தனது பெயரை அச்சிட்டு பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களின் பேட்டியோடு கடந்த 2018ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதையடுத்து கேத் ரானியர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நியூயார்க் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் நடந்த இறுதி விசாரணையில் கேத் ரானியர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 120 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Next Story