உலகளாவிய சவால்களை சந்திக்க அமெரிக்காவிற்கு இந்தியாவின் கூட்டுறவு தேவை - அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து


உலகளாவிய சவால்களை சந்திக்க அமெரிக்காவிற்கு இந்தியாவின் கூட்டுறவு தேவை - அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து
x
தினத்தந்தி 29 Oct 2020 12:23 AM GMT (Updated: 29 Oct 2020 12:23 AM GMT)

உலகளாவிய சவால்களை சந்திக்க அமெரிக்காவிற்கு இந்தியாவின் கூட்டுறவு தேவை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்கன் ஓர்டகஸ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இரு நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையேயான இரண்டுக்கு இரண்டு (‘2+2’) பேச்சுவார்த்தை ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘2+2’ பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது லடாக்கில் சீனாவுடனான எல்லை பதற்றம், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம், ராணுவ தகவல் பகிர்வு மற்றும் பாதுகாப்பு வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்தியா-சீனா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்கன் ஓர்டகஸ், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் உலகளாவிய சவால்களை சந்திக்க அமெரிக்காவிற்கு இந்தியாவின் கூட்டுறவு தேவை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு குறித்து பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு நீடித்து வருவதாகவும், இன்னும் பல தசாப்தங்களுக்கு இந்த உறவு தொடரும் என்றும் தெரிவித்தார். மேலும் அமெரிக்கா பல நாடுகளுடன் நட்பாக இருந்து வந்தாலும், இந்தியா போன்ற நாடுகளுடன் தான் ‘2+2’ உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் போடப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்தியா இப்போது முக்கியமான உலகளாவிய சக்தியாக உள்ளது என்று தெரிவித்த அவர், அமெரிக்கா எதிர்கொள்ளும் பல உலகளாவிய சவால்களில், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுறவு அமெரிக்க அரசாங்கத்திற்கு நிச்சயம் தேவை என்று தெரிவித்துள்ளார்.

Next Story