அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உறுதியாக தெரிய வருவது எப்போது?


அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உறுதியாக தெரிய வருவது எப்போது?
x
தினத்தந்தி 4 Nov 2020 4:07 PM GMT (Updated: 4 Nov 2020 4:07 PM GMT)

வெள்ளை மாளிகையை மீண்டும் பிடிக்கப் போவது அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்பா, இல்லை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து நீண்ட நேரமாகிவிட்டது. அமெரிக்கத் தேர்தல்களில் முடிவுகள் உடனடியாகத் தெரியத் தொடங்கிவிடும். இதற்கு மாறாக, வெள்ளை மாளிகையை மீண்டும் பிடிக்கப் போவது அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்பா, இல்லை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனா என்பது இன்னும் தெளிவாகவில்லை. வழக்கமாக, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு, வாக்குப்பதிவு நாளன்று இரவே தெரிந்துவிடும்.

எல்லா வாக்குகளும் தேர்தல் நாளன்று இரவே எப்போதும் எண்ணி முடிக்கப்பட்டதில்லை. ஆனால், வெற்றி பெற்றவர் யார் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் அன்று இரவே எண்ணி முடிக்கப்பட்டிருக்கும். ஆனால், நடப்பு ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்சனையால் அஞ்சல் வழியாகவோ, நேரிலோ வழக்கத்தைவிட நிறைய பேர் சீக்கிரமாகவே வாக்களித்துவிட்டனர். இதனால், இயல்பாகவே சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த தேர்தல் முடிவுகள் எப்போது உறுதியாக தெரிய வரும் என்ற எதிர்பார்ப்புகள் உலகம் முழுவதும் உள்ளது. 
அமெரிக்காவில் மத்திய அரசை விட மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் உள்ளது. இதனால், வாக்களிக்கும் முறை  மாகாணங்களுக்கு மாகாணங்கள் மாறுபடுகிறது.  

அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதும் தாமதத்திற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் மொத்த வாக்காளர்கள் 15 கோடி. இதில்  தபால் வாக்குகள் மட்டும் 10 கோடி பதிவாகியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக இந்த தேர்தலில் அதிக அளவு தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் மாகாணத்திற்கு மாகாணம் விதிகள்  வேறுபடுகிறது.  இந்தியாவில் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைக்கிறது. ஆனால், அமெரிக்காவில் தேசிய அளவில் இதுபோன்ற அமைப்பு ஒன்று இருந்தாலும் மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் உள்ளது. எப்படி தேர்தல் நடத்துவது, எப்படி முடிவுகளை வெளியிடுவது வாக்கு எண்ணிக்கை போன்றவற்றில் மாகாண அரசுகளுக்கு தனி அதிகாரம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் சட்டங்கள் வெவ்வேறாக உள்ளன. எனவே மாகாண  அரசு அளிக்கும் போது மட்டுமே முடிவு  தெரியவரும். 

டிரம்ப் உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக கூறியிருக்கிறார். அவ்வாறு நடந்தால், முடிவுகள் தெரிய வர எத்தனை நாட்கள் ஆகும் என தெரியாது. கடந்த 2000 ஆம் ஆண்டில்  தேர்தல் ரீதியாக  பிரச்சினை வரும் போது அதிபர் யார்? என்று தெரிவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அதே நிலையை நோக்கியே தற்போது செல்கிறது. இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரியவர சில வாரங்களும் ஆகலாம். மாதங்களும் ஆகலாம். 

Next Story