ரஷிய அதிபர் புதின் அடுத்த ஆண்டு பதவி விலகுகிறாரா? கிரெம்ளின் மாளிகை விளக்கம்


ரஷிய அதிபர் புதின் அடுத்த ஆண்டு பதவி விலகுகிறாரா? கிரெம்ளின் மாளிகை விளக்கம்
x
தினத்தந்தி 7 Nov 2020 2:07 AM GMT (Updated: 7 Nov 2020 2:07 AM GMT)

உடல்நலக்குறைவு காரணமாக ரஷிய அதிபர் புதின் அடுத்த ஆண்டு பதவி விலக உள்ளதாக தகவல் வெளியானது.

மாஸ்கோ, 

ரஷியாவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் புதின் அதிபராக இருந்து வருகிறார். அவர் ரஷியாவின் செல்வாக்கு மிக்க தலைவராக அறியப்படுகிறார். ரஷியாவில் அதிபரின் பதவிக்காலம், 6 ஆண்டுகள் ஆகும். அந்த நாட்டு அரசியல் சாசனப்படி, ஒருவர், 2 முறை மட்டுமே தொடர்ந்து அதிபராக நீடிக்கலாம்.

அதன்படி புதினின் பதவிக்காலம் வருகிற 2024-ம் ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், அவர் மேலும் 12 ஆண்டுகள் அதிபராக இருக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது 2024 மற்றும் 2030-ல் நடைபெறும் அதிபர் தேர்தல்களில் புதின் போட்டியிடும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கும் விடப்பட்டது. அதில் சுமார் 78 சதவீதம் பேர் ரஷிய அதிபராக புதின் 2036-ம் ஆண்டு வரை தொடர விருப்பம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து புதின் 2036 வரை, அதாவது, அவரது, 83-வது வயது வரை, அதிபராக இருப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக புதின் அடுத்த ஆண்டு ஜனவரியில் பதவி விலக உள்ளதாக தகவல் வெளியானது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகர் வலேரி சோலோவி என்பவர் இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். அப்போது அவர் கூறும் போது, “புதின் பார்கின்சன் நோயால் அவதிப்படுகிறார். அண்மையில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியின் வீடியோ பதிவை பார்த்தால் இதை தெரிந்து கொள்ள முடியும். அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். நாற்காலியை பிடித்து அமரும் போது அவர் கைகளில் வலியை உணர்வதை காணமுடிகிறது. பேனாவை பிடித்து எழுதும் போது அவரது கைகள் நடுங்குகிறது.

எனவே அவர் தனது பொது வாழ்வில் இருந்து விலகி உடல் நிலையில் கவனம் செலுத்துவதற்காக தனது 37 வயது காதலி அலினா கபீவா மற்றும் 2 மகள்கள் ஆகியோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி பதவியை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளார். தனது குடும்பத்தினரின் ஆலோசனைகளை பெரிதும் மதிக்கக்கூடியவரான புதின் அவர்களின் யோசனையை ஏற்று அடுத்த ஆண்டு ஜனவரியில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக புதின் விரைவில் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார். பின்னர் அவரை அதிபராக்குவார்” என்றார். 

உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்படும் புதின்,  பதவி விலக உள்ளதாக  வெளியான தகவல் உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இந்த நிலையில், புதின் பதவி விலக உள்ளார் என்ற தகவலை ரஷ்யாவின் அதிபர் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இது பற்றி கூறுகையில், “ புதின் நலமாக உள்ளார். அவர் பதவி விலக இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் முட்டாள்தனமானது” என்றார். 

Next Story