மியான்மர் தேர்தல்; வெற்றி பெற்ற சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து


மியான்மர் தேர்தல்; வெற்றி பெற்ற சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 12 Nov 2020 6:14 PM GMT (Updated: 12 Nov 2020 6:14 PM GMT)

மியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கொண்டார்.

யாங்கோன்,

மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், மியான்மர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனநாயக நடைமுறை உருமாற்றத்திற்கான மற்றொரு நடவடிக்கையாக தேர்தல் வெற்றிகரமுடன் நடத்தப்பட்டு உள்ளது.  நம் இரு நாடுகளின் நட்புறவின் பாரம்பரிய பிணைப்புகளை வலுப்படுத்த உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Next Story