கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் டிரம்ப், என்னுடன் ஒத்துழைக்காவிட்டால் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும்


கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் டிரம்ப், என்னுடன் ஒத்துழைக்காவிட்டால் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும்
x
தினத்தந்தி 17 Nov 2020 9:24 PM GMT (Updated: 17 Nov 2020 9:24 PM GMT)

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் டிரம்ப், என்னுடன் ஒத்துழைக்காவிட்டால் அமெரிக்காவில் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் வருகிற ஜனவரி 20-ந்தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.

ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டும் அவர் முக்கிய மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

டிரம்பின் இந்த பிடிவாதத்தால் அவரிடமிருந்து ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சிக்கல் எழும் சூழல் உருவாகியுள்ளது. எனவே டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனாவின் 2-வது அலை

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கத் தொடங்கியுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. அதேபோல் அங்கு பலி எண்ணிக்கையும் தினமும் ஆயிரத்துக்கு அருகில் இருந்து வருகிறது.இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் டிரம்ப் தனக்கு ஒத்துழைக்காவிட்டால் இன்னும் ஏராளமான அமெரிக்கர்கள் கொரோனாவால் உயிரிழக்க நேரிடும் என ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.தனது சொந்த மாகாணமான டெலாவேரில் உள்ள வில்மிங்டன் நகரில் ஜோ பைடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி டிரம்ப் எங்களுடன் ஒத்துழைத்து செயல்படாவிட்டால், இன்னும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும்.

அரசிடம் என்ன திட்டம் உள்ளது?

தடுப்பு மருந்து மிகவும் முக்கியமானது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரை கொரோனாவில் தப்பிக்க வாய்ப்பு குறைவுதான். ஆனால், தடுப்பூசி கண்டுபிடித்து நடைமுறைக்கு வந்துவிட்டால், மக்கள் எவ்வாறு தடுப்பூசியைப் பெறுவார்கள், 30 கோடி அமெரிக்க மக்களுக்கும் எவ்வாறு வழங்கப்போகிறீர்கள் எனும் திட்டம் ஏதும் இருக்கிறதா? அதற்காக அரசு என்ன திட்டத்தை வைத்துள்ளது?

மக்களுக்கு தடுப்பூசி போடுதல் என்பது மிகப்பெரிய பணி. முன்னுரிமை அடிப்படையில்தான் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும். உலக சுகாதார அமைப்புடன் ஒத்துழைத்துதான் இந்த பணியை நம்மால் செய்ய முடியும்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமான வேகத்தில் செல்கிறது என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது. தடுப்பு மருந்து நமது கைக்கு கிடைத்தால் மட்டும் போதாது. அதை எப்படி மக்களுக்கு வழங்கப்போகிறோம்.

ஒத்துழைத்து செயல்பட வேண்டும்

2021-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதிவரை காத்திருந்தால், எங்களின் திட்டம் தொடங்கிவிடும். ஆனால் அதற்கு இன்னும் 1½ மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

எனவே இப்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானது, ஜனாதிபதி டிரம்ப் எங்களுடன் ஒத்துழைத்து செயல்பட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களிடம் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு எவ்வாறு வழங்குவது, ஒவ்வொருவருக்கும் எப்படி வழங்குவது, தொழிலாளர்கள், குடியரசு கட்சியினர், ஜனநாயக கட்சியினர் அனைவருக்கும் எவ்வாறு வழங்குவது என செயல்திட்டம் இருக்கிறது. நான் உங்களிடம் கூறுவது என்னவென்றால், நான் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைத்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்.

Next Story