கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஈரானில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு:  ஈரானில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
x
தினத்தந்தி 21 Nov 2020 10:42 PM GMT (Updated: 21 Nov 2020 10:42 PM GMT)

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 931- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

தெஹ்ரான்,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று முதன் முதலாக வெளிப்பட்டு ஏறத்தாழ ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், தொற்றின் பரவல் கட்டுக்குள் வந்த பாடில்லை. பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவத் தொடங்கிவிட்டது. இதனால், மக்கள் விழி பிதுங்கியுள்ளனர். 

தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் இன்னும் பொதுப் பயன்பாட்டுக்கு வராததால், சில நாடுகள் ஊரடங்கு என்ற அஸ்திரத்தையே மீண்டும் கையில் எடுத்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்ட நிலையில், ஈரானிலும் தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஈரானில் கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் ஆகியவை செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், தலைநகர் தெஹ்ரான் உள்பட பெரிய நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஈரானில் 160 நகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் இடங்களாக உள்ளன என்று  அதிகாரிகள் கூறினர். 

சனிக்கிழமை ஈரான் மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அதிபர் ஹசன் ரவுகானி, “கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், நாட்டில் உள்ள 3 கோடி ஏழை மக்களுக்கு நான்கு மாதங்களுக்குப் பண உதவியும் அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 

தெஹ்ரானில் பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மசூதிகளில் பெரிய அளவில் தொழுகை நடத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே போன்ற கட்டுப்பாடுகள் பிற பெரிய நகரங்களிலும் விதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை. தற்போது அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 2-வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது.  அமெரிக்காவின் பொருளாதார தடையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரான், பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கை அமல்படுத்தவில்லை. 

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 931- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் 431- பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 41-ஆயிரத்தை கடந்துள்ளது. 

Next Story