நைஜீரியாவில் விவசாயிகள் 40 பேர் கழுத்தை அறுத்து படுகொலை


நைஜீரியாவில் விவசாயிகள் 40 பேர் கழுத்தை அறுத்து படுகொலை
x
தினத்தந்தி 29 Nov 2020 11:06 PM GMT (Updated: 29 Nov 2020 11:06 PM GMT)

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் விவசாயிகள் 40 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர்.

மயூடுகுரி, 

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள போர்னோ மாகாணத்தில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. அங்கு இவர்கள் அப்பாவி கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு போர்னோ மாகாணத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதனிடையே அந்த மாகாணத்தில் நெல் உற்பத்திக்கு பெயர்போன கரின் குவாஷேபே என்ற கிராமத்தில் வயல்களில் அறுவடை நடைபெற்றது. பெரும்பாலான விவசாயிகள் வாக்களிக்க செல்லாமல் வயல்களில் அறுவடையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் வயல்களில் அறுவடையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் கூர்மையான ஆயுதங்களை கொண்டு விவசாயிகளை கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். இப்படி 40 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

40 விவசாயிகள் ஒரே சமயத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “போர்னோ மாகாணத்தில் பயங்கரவாதிகளால் எங்களின் கடின உழைப்பாளிகளான விவசாயிகள் கொல்லப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இந்த விவேகமற்ற கொலைகளால் முழு நாடும் பாதிக்கப்படுகிறது” என்றார்.

Next Story