விடுதலை புலிகள் இயக்கத்துக்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா? ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணை


விடுதலை புலிகள் இயக்கத்துக்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா? ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 Dec 2020 1:03 AM GMT (Updated: 1 Dec 2020 1:03 AM GMT)

இலங்கை உள்நாட்டு போரின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா? என ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.

லண்டன், 

இலங்கையில் 1980-களில் அந்த நாட்டு அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான சண்டையில் இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கு குறித்து ஸ்காட்லாந்து யார்டு போர்க்குற்ற குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒடுக்க இலங்கையின் சிறப்பு போலீஸ் படைக்கு இங்கிலாந்தின் கே.எம்.எஸ். என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் பயிற்சி வழங்கியதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பரிந்துரை கிடைத்ததாகவும் அது தற்போது விசாரணையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த இங்கிலாந்தை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதிய புத்தகத்தில் இலங்கை உள்நாட்டுப் போரில் கே.எம்.எஸ். பாதுகாப்பு நிறுவனத்தின் போர்க்குற்றங்கள் குறித்து குறிப்புகள் இருந்தன. இதுவே ஸ்காட்லாந்து யார்டு போர்க்குற்ற குழுவின் விசாரணைக்கு வித்திட்டது.

இதுகுறித்து பில் மில்லர் கூறுகையில் “இந்த போலீஸ் விசாரணையை நான் வரவேற்கிறேன். இது நீண்ட கால தாமதமாகும். கே.எம்.எஸ்.க்கு எதிரான பெரும்பாலான சான்றுகள் இங்கிலாந்து வெளியுறவு அலுவலக கோப்புகளில் 30 ஆண்டுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் கொந்தளிப்பான வரலாற்றில் இந்த இங்கிலாந்து நிறுவனத்தின் பங்கு எந்த அளவிற்கு உள்ளது என்றும் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன” என்றார்.

Next Story