ஆஸ்திரேலியா மீது போர் குற்றம்; சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பும் நியூசிலாந்து


ஆஸ்திரேலியா மீது போர் குற்றம்; சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பும் நியூசிலாந்து
x
தினத்தந்தி 2 Dec 2020 1:49 AM GMT (Updated: 2 Dec 2020 1:49 AM GMT)

போலியான புகைப்படம் மூலம் ஆஸ்திரேலியா மீது போர் குற்றம் சுமத்திய விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக நியூசிலாந்து குரல் எழுப்பியுள்ளது.

வெலிங்டன், 

உலக நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதால், அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க பல நாடுகள் விரும்புகின்றன. அவற்றில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.
கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பது குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு வித்திட்டது.

இந்த மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் மீது சீனா போர் குற்றம் சுமத்தியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் நேற்று முன்தினம் டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அதில் ஆஸ்திரேலிய ராணுவ சீருடையில் இருக்கும் ஒரு நபர் குழந்தையின் கழுத்தில் ரத்தக்கரை படிந்த கத்தியை வைத்து இருக்கும் வகையில் அந்த படம் இருந்தது. மேலும் “ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் மற்றும் கைதிகளை ஆஸ்திரேலியா படையினர் கொலை செய்ததில் அதிர்ச்சியடைந்தோம். இது போன்ற செயல்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். அவர்களை பொறுப்புக்கூற வைக்க அழைப்பு விடுக்கின்றோம்” எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில், ஆஸ்திரேலிய அதிரடி படை வீரர்கள் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் 39 பேரை கொன்றது போர்க்குற்றம் என ஆஸ்திரேலிய ராணுவம் அறிவித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சீனா வெளியிட்ட இந்த புகைப்படம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த புகைப்படம் போலியானது என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.

இதுதொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், “பழிவாங்கும் எண்ணத்துடன் போலியான, மூர்க்கத்தனமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்த போலி புகைப்படம் எங்கள் படைகள் மீது மோசமான கறையை படிய செய்கிறது. இந்த தவறான பதிவுக்காக சீனா வெட்கப்பட வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் சீனா ஆஸ்திரேலியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறினார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து நியூசிலாந்து சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி கூறுகையில் “இது உண்மைக்கு மாறான ஒரு படம். அது சரியாக இல்லை. இது போன்ற படங்கள் பயன்படுத்தப்படும் போது எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு நாங்கள் அந்த கவலைகளை எழுப்புவோம். கண்டனத்தை பதிவு செய்வோம். நாங்கள் அதை நேரடியாக செய்வோம்” என கூறினார்.

ஆனால் சீனா இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதோடு, தங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப ஆஸ்திரேலியா முயற்சிப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சீனா மீதான குற்றச்சாட்டுகள் 2 நோக்கங்களுக்காகவே செய்யப்படுகின்றன. ஒன்று, சில ஆஸ்திரேலிய வீரர்களின் கொடூரமான அட்டூழியங்களில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவது. மற்றொன்று இருதரப்பு உறவுகள் மோசம் அடைவதற்கு சீனாவை குறை கூறுவது. ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த குற்றங்களை ஆஸ்திரேலியா தரப்பு எதிர்கொள்ள வேண்டும். அந்த குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைத்து, பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும் என்பதே எங்களது ஆலோசனை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story