கொரோனா தொற்று: நவாஸ் ஷெரீப்புக்கு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிபதி உயிரிழப்பு


கொரோனா தொற்று:  நவாஸ் ஷெரீப்புக்கு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிபதி உயிரிழப்பு
x
தினத்தந்தி 4 Dec 2020 7:51 PM GMT (Updated: 4 Dec 2020 7:51 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவி காலத்தில் செய்த ஊழல் தொடர்புடைய வழக்கொன்றில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, அந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதி அர்ஷத் மாலிக், ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.  எனினும், ஷெரீப்புக்கு தீர்ப்பு வழங்கும் முன் நெருக்கடிக்கு ஆளானேன். மிரட்டப்பட்டேன் என அர்ஷத் கூறிய வீடியோ ஒன்று வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது.  இதனால் நீதிபதி பதவியில் இருந்து அர்ஷத் நீக்கப்பட்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் அர்ஷத்துக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல குறைவு ஏற்பட்டது.  இதனால் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள சிபா சர்வதேச மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வென்டிலேட்டர் சிகிச்சையும் வழங்கப்பட்டது.  எனினும், இதில் பலனின்றி அர்ஷத் இன்று உயிரிழந்துள்ளார்.  இதனை அவரது உறவினர் வாஹீத் ஜாவித் உறுதிப்படுத்தினார்.  கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்னாள் நீதிபதி அர்ஷத்துக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

Next Story