டிரம்பை பயங்கரவாதி என அழைத்த ஈரான் அதிபர்


டிரம்பை பயங்கரவாதி என அழைத்த ஈரான் அதிபர்
x
தினத்தந்தி 16 Dec 2020 10:23 PM GMT (Updated: 16 Dec 2020 11:05 PM GMT)

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றிய டிரம்ப் அதன் பின்னர் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார்.

டெஹ்ரான், 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பதவி காலத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் மோசமடைந்தது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றிய டிரம்ப் அதன் பின்னர் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார்.

இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை அமெரிக்க தேர்தல் சபையும் தற்போது உறுதி செய்துவிட்டது. எனவே டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது உறுதியாகிவிட்டது. இது குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கருத்து தெரிவிக்கையில் அவர் டிரம்பை பயங்கரவாதி என குறிப்பிட்டார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது இது குறித்து அவர் பேசுகையில் “ஜோ பைடனின் வருகையைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் டிரம்ப் வெளியேறுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மூர்க்கத்தனமான, சட்டவிரோதி மற்றும் பயங்கரவாதியான டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.


Next Story