ஆப்கானிஸ்தானில் கடைக்கு யார் உரிமையாளர் என்பதில் மோதல்: 4 பேர் கொலை


ஆப்கானிஸ்தானில் கடைக்கு யார் உரிமையாளர் என்பதில் மோதல்:  4 பேர் கொலை
x
தினத்தந்தி 22 Dec 2020 6:09 PM GMT (Updated: 22 Dec 2020 6:09 PM GMT)

ஆப்கானிஸ்தானில் நடந்த இரு வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 2 வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கு சவாலாக இருந்து ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாத அமைப்பு அவ்வப்பொழுது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.  இந்த நிலையில், அந்நாட்டின் வடக்கே அமைந்த பர்யாப் மாகாணத்தில் தவ்லத் ஆபத் மாவட்டத்தில் கார் ஒன்றை திடீரென வெடிக்க செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 3 பேர் கொல்லப்பட்டனர்.  இதேபோன்று பொதுமக்களில் 5 பேர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.  இந்த தாக்குதலை தலீபான் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் என மாகாண காவல் துறை செய்தி தொடர்பு அதிகாரி அப்துல் கரீம் யூரிஷ் தெரிவித்து உள்ளார்.

அந்நாட்டின் கிழக்கே அமைந்த கோஸ்ட் மாகாணத்தில் யாகுபி மாவட்டத்தில் ராணுவ வாகனம் ஒன்றின் மீது இன்று மதியம் மற்றொரு குண்டுவெடிப்பு தாக்குதல் ஒன்று நடந்தது.  இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 4 பேர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.  6 பேர் காயமடைந்தனர்.

இதேபோன்று அந்நாட்டின் பர்வான் என்ற மத்திய பகுதியில் அமைந்த மாகாணத்தில் கடை ஒன்றிற்கு யார் உரிமையாளர் என்பதில் இன்று மதியம் மோதல் ஏற்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.  3 பேர் காயமடைந்தனர்.  இதனை மாகாண காவல் துறை அதிகாரி முகமது சாதிக் ஹாசிமி தெரிவித்து உள்ளார்.

ஆப்கானிஸ்தானின் காபூல், குந்தூஜ், கோஸ்ட் மற்றும் பர்யாப் ஆகிய 4 மாகாணங்களில் இன்று குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.  இதனால் பொதுமக்கள் அந்நாட்டில் நிம்மதியின்றி அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.  இதற்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

Next Story