தென் சீனக்கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியடிக்கப்பட்டது - சீனா தகவல்


தென் சீனக்கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியடிக்கப்பட்டது - சீனா தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2020 9:16 PM GMT (Updated: 22 Dec 2020 9:16 PM GMT)

தென் சீனக்கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியடிக்கப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங், 

தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.

இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுடன் மோதலில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கிறது.

மேலும் சீனாவை எச்சரிக்கும் விதமாக தென் சீனக்கடல் பகுதிக்கு அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அனுப்பி போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில் தென் சீனக்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலை விரட்டியடித்ததாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன ராணுவத்தின் தெற்கு பிரிவு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஜான் மெக்கெய்ன் போர்க்கப்பல் சீன அரசாங்கத்தின் அங்கீகாரம் இன்றி சீனாவின் நான்ஷா தீவு அருகே கடலுக்குள் நுழைந்தது. இதனையடுத்து சீன ராணுவ தெற்கு பிரிவு படையின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் அமெரிக்க போர்க்கப்பலை எச்சரித்து விரட்டி அடித்தன” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா தரப்பில் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.


Next Story