ஈரானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி


ஈரானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி
x
தினத்தந்தி 27 Dec 2020 10:47 PM GMT (Updated: 27 Dec 2020 10:47 PM GMT)

இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு ஈரானில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.

டெஹ்ரான், 

ஈரான் தலைநகர் டெஹ்ரானின் வடக்குப் பகுதியில் அல்போர்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது. இது புகழ் பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இங்கு மலை ஏற்றம் மற்றும் சறுக்கு விளையாட்டு மிகவும் பிரபலமானதாகும். எனவே வார இறுதி நாட்களில் மலையேற்ற வீரர்கள் மற்றும் சறுக்கு வீரர்கள் இங்கு அதிக அளவில் வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஏராளமான மலையேற்ற வீரர்கள் மற்றும் சறுக்கு வீரர்கள் அல்போர்ஸ் மலையில் ஏறிக் கொண்டிருந்தனர். 

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அல்போர்ஸ் மலையின் வெவ்வேறு பகுதிகளில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. பனி சரிந்து விழுந்ததில் மலையேற்ற வீரர்கள் மற்றும் சறுக்கு வீரர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக பனிச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்தனர். 

அங்கு அவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.எனினும் 10 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அதேசமயம் மலை உச்சியில் தவித்துக் கொண்டிருந்த 14 மலையேற்ற வீரர்களை மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். எனினும் இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் மாயமாகினர். அவர்களின் கதி? என்ன என்பது தெரியவில்லை. 

அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ஈரானைப் பொறுத்தவரையில் பனிச்சரிவு என்பது மிகவும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு ஈரானில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.

Next Story