பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது; 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு


பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது; 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 28 Dec 2020 12:46 AM GMT (Updated: 28 Dec 2020 12:46 AM GMT)

பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியம் சர்ச்சைக்குள்ளான பகுதியாக விளங்குகிறது. இங்கு அரசுக்கு எதிரான கிளர்ச்சி அமைப்புகள் பல செயல்பட்டு வருவதால் பாகிஸ்தான் ராணுவம் இங்கு அதிக அளவு படைகளை குவித்துள்ளது. ராணுவ வீரர்கள் பிராந்தியம் முழுவதும் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்தநிலையில் கில்கிட் பால்டிஸ்தானின் மினிமர்க் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ஹெலிகாப்டரில் 2 விமானிகள் உட்பட 4 ராணுவ வீரர்கள் இருந்தனர். புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் நிலை தடுமாறிய ஹெலிகாப்டர் அங்குள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் இது பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story