அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா மீதான தடை மார்ச் 31–ந் தேதி வரை நீட்டிப்பு: டிரம்ப் அதிரடி உத்தரவு


அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா மீதான தடை மார்ச் 31–ந் தேதி வரை நீட்டிப்பு:  டிரம்ப் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 2 Jan 2021 12:22 AM GMT (Updated: 2 Jan 2021 12:22 AM GMT)

அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா மீதான தடையை மார்ச் 31–ந் தேதி வரை நீட்டித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது.

இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும் தான் பெற்று வருகின்றனர்.

குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது. இதனிடையே டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு வந்தது முதல் ‘‘அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே’’ என்ற கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

அந்த அடிப்படையில் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ‘எச்1 பி’ விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை அவர் கொண்டு வந்தார்.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ‘எச்1 பி’, ‘எச்2 பி’, ‘எல்’ மற்றும் ‘ஜே’ விசாக்கள் வழங்குவதை 2020 டிசம்பர் 31 வரை நிறுத்திவைக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார். அதைப்போல் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக வழங்கப்படும் ‘கிரீன் கார்டு’ வழங்குவதையும் நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

டிரம்பின் இந்த அதிரடி உத்தரவுகள் இந்தியாவை சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

புதிதாக ‘எச்1 பி’ விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமின்றி, ‘எச்1 பி’ விசா நீட்டிப்புக்காக காத்திருந்த பல ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ‘எச்1 பி’ விசா உள்ளிட்ட பணி விசாக்கள் மீதான தடையை மார்ச் 31 வரை நீட்டித்து ஜனாதிபதி டிரம்ப் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய டிரம்ப் வருகிற 20–ந் தேதி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ள நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான காரணங்கள் மாறாததால் தடைகள் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் இந்த புதிய உத்தரவால் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், டிரம்பின் குடியேற்ற கொள்கைகள் கொடூரமானவை என்றும், தனது நிர்வாகம் ‘எச்1 பி’ விசாக்களுக்கான தடையை நீக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.


Next Story