பாதுகாப்பு கொள்கை மசோதா: டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரித்த அமெரிக்க நாடாளுமன்றம்


பாதுகாப்பு கொள்கை மசோதா:  டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரித்த அமெரிக்க நாடாளுமன்றம்
x
தினத்தந்தி 2 Jan 2021 9:35 PM GMT (Updated: 2 Jan 2021 9:35 PM GMT)

அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கை மசோதாவில் ஜனாதிபதி டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 46–வது ஜனாதிபதியாக வருகிற 20–ந்தேதி பதவி ஏற்கிறார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார். மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இதனிடையே டிரம்ப் இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ள நிலையில் அமெரிக்க அரசு துறைகள் தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான சில முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில், 2021–ம் ஆண்டுக்கான, இந்திய மதிப்பில் சுமார் ரூ.54 லட்சம் கோடி மதிப்புள்ள ராணுவ பட்ஜெட்டை உறுதி செய்யும் ‘‘தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் 2021’’ என்கிற பாதுகாப்பு கொள்கை மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேறியது.

இதனை தொடர்ந்து அந்த மசோதா ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, டிரம்ப் தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார்.

இந்த மசோதாவின் 230–ம் பிரிவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது என்றும் ராணுவ மையங்களின் பெயர்களை மாற்றுவது, அவசரகால முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லாதது என பல சர்ச்சைக்குரிய வி‌ஷயங்கள் மசோதாவில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்த தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த மசோதாவிலிருந்து கிடைக்கும் நிதி மூலமே பாதுகாப்பு படையினருக்கு ஊதியம் அளிப்பது முதல் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது வரை அனைத்தும் மேற்கொள்ள முடியும். எனவே இந்த மசோதாவுக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்ததற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

அமெரிக்க அரசியலமைப்பை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3–ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்க முடியும்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

அங்கு 322 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 87 பேர் எதிராகவும் வாக்களித்தனர். டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த, 109 எம்.பி.க்கள், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் மூலம் அந்த தீர்மானம் பெருவாரியான வித்தியாசத்தில் நிறைவேறியது. இது, ஜனாதிபதி டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதேசமயம் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறாது என டிரம்ப் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் 81 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இதன் மூலம் செனட் சபையிலும் இந்த மசோதா எளிமையாக நிறைவேறியது. டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அவரது வீட்டோ அதிகாரம் நிராகரிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதுவும் டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் சில தினங்களுக்கு முன்பாக இது நடந்துள்ளது.


Next Story