இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம்; பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 4 Jan 2021 2:32 AM GMT (Updated: 4 Jan 2021 2:32 AM GMT)

இங்கிலாந்தில் வீரியமிக்க புதிய வகை கொரோனா பரவலால், தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

லண்டன்,

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் மட்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் நாடு முழுவதும் சில வாரங்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி அவர் “பள்ளிகள் பாதுகாப்பானவை. அதை வலியுறுத்துவது மிகவும் முக்கியம். இளைஞர்கள் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் மிகவும் சிறியது. ஊழியர்களுக்கு ஏற்படும் ஆபத்து மிகக்குறைவு. கல்வியின் நன்மைகள் மிகப்பெரியவை” என்றார்.

அதேசமயம் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்று எச்சரித்தார். இதுபற்றி அவர் கூறுகையில் “அடுத்த சில வாரங்களில் நாம் கடினமான காரியங்களை செய்ய வேண்டி இருக்கலாம் நான் அதனுடன் முழுமையாக சமரசம் செய்கிறேன். முழு நாடும் அதனுடன் முழுமையாக சமரசம் செய்து கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பலவிதமான கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்” என கூறினார்.


Next Story