ஜெர்மனியில் ஜனவரி இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; அதிபர் மெர்கல் அறிவிப்பு


ஜெர்மனியில் ஜனவரி இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; அதிபர் மெர்கல் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2021 11:42 PM GMT (Updated: 5 Jan 2021 11:42 PM GMT)

ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரிப்பினை கட்டுப்படுத்த ஜனவரி இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பெர்லின்,

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்த வைரசானது சீனாவுக்கு வெளியே முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளில்தான் பரவியது. அதிலும் குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டன. எனினும் மே மாதத்துக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்தது.

இதனை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் விதமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தின. இந்தசூழலில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2-வது அலை அதிதீவிரமாக பரவியது.

குறிப்பாக ஜெர்மனியில் கொரோனா வைரசின் முதல் அலையை விட 2-வது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அங்கு இந்த வைரஸ் தினம்தோறும் ஆயிரக்கணக்கானேரை தாக்கியதோடு நூற்றுக்கணக்கானோரின் உயிரையும் பறித்தது.

இதனிடையே கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து ஜெர்மனி அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது. இதில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த முழு ஊரடங்கு டிசம்பர் 16-ந் தேதி தொடங்கி ஜனவரி 10-ந் தேதி வரை அமலில் இருக்கும் என ஜெர்மனி அரசு அறிவித்தது.

இந்த ஊரடங்கில், முழுவதும் சூப்பர் மார்க்கெட் போன்ற மிகவும் அத்தியாவசியமான கடைகள் மட்டுமே திறந்திருந்தன.  ஓட்டல்கள், மதுபான விடுதிகள், ஓய்வு விடுதிகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன.  அதேபோல் மக்களின் பணத்தேவைக்காக வங்கிகள் திறந்திருக்கும் என்றும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புது வருட பிறப்புக்கு பின்னரும் ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.  அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக, புதிய கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.  இதன்படி, ஜனவரி இறுதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.  இதற்கான அறிவிப்புகளை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் வெளியிட்டு உள்ளார்.

Next Story