இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து


இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து
x
தினத்தந்தி 6 Jan 2021 1:42 AM GMT (Updated: 6 Jan 2021 1:42 AM GMT)

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வரவிருந்த பயணத்தை ரத்து செய்தார்.

லண்டன், 

டெல்லியில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இந்தியா வருவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் தற்போது அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஒருபுறம் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தாலும் வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது.எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மீண்டும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை பிரதமர் போரிஸ் ஜான்சன் அமல்படுத்தினார்.

இந்த நிலையில் நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்து உள்ளார். இதுதொடர்பாக போரிஸ் ஜான்சன் நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது திட்டமிட்டபடி இந்தியா வர முடியாமல் போனதற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

நாடு முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதாலும், புதிய வகை கொரோனா வைரஸ் பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் தான் இங்கிலாந்தில் இருப்பது முக்கியம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கருதுகிறார்.

இதன் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும். எனவே அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தார். 

இந்த உரையாடலின் போது இருதரப்பு உறவில் தங்களது அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டிய தலைவர்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது உள்பட இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை தொடர்ந்து கட்டியெழுப்ப உறுதி பூண்டனர்.பிரதமர் மோடி விருந்தினராக கலந்துகொள்ளும் இங்கிலாந்தின் ஜி7 உச்சி மாநாட்டுக்கு முன்பாக தான் இந்தியாவுக்கு செல்ல முடியும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்தி தொடர்பாளர் கூறினார்.

Next Story