அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உள்ளநாட்டு பயங்கரவாதிகள் - ஜோ பைடன் விமர்சனம்


அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உள்ளநாட்டு பயங்கரவாதிகள் - ஜோ பைடன் விமர்சனம்
x
தினத்தந்தி 7 Jan 2021 9:51 PM GMT (Updated: 7 Jan 2021 9:51 PM GMT)

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உள்ளநாட்டு பயங்கரவாதிகள் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.


வாஷிங்டன், 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்தது.

இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்பை ஜனநாயக கட்சி வேட்பாளர்ஜோ பைடன் தோற்கடித்தார்.

டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாததோடு, எந்தவித ஆதாரங்களையும் வழங்காமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வந்தார்.

ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து அவர் நடத்திய சட்டப் போராட்டம் தோல்வியில் முடிந்தது.‌ ஆனாலும் அவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்தநிலையில், ஜோ பைடனின் வெற்றிக்கு அதிகாரபூர்வ ஒப்புதல் அளித்து சான்றிதழ் வழங்குவதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அவையில் கூடி இருந்தனர்.

இதனிடையே நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஜனாதிபதி தேர்தல் முடிவை எதிர்த்து தலைநகர் வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

தேர்தல் மூலம் டிரம்பின் வெற்றியை பைடன் தரப்பு திருடிவிட்டதாகவும் அவரது வெற்றிக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் கூறி முழக்கம் எழுப்பியபடியே அவர்கள் நாடாளுமன்றத்தை நெருங்கினர். சற்று நேரத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.‌ நேரம் செல்லச் செல்ல அங்கு பதற்றமான சூழல் உருவானது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்புறம் துப்பாக்கிகளுடன் அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். 

இதற்கிடையில் நாடாளுமன்றத்துக்குள்ளே ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் ஆவேசமாக நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர்.

ஆனால் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு படையினரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே டிரம்பின் ஆதரவாளர்கள் பலர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.

துப்பாக்கி சூட்டுக்கு பிறகும் நிலைமை அங்கு கட்டுக்குள் வரவில்லை போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து சூறையாடினர்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை குறித்து ஜோ பைடன் கூறியதவது:-

நேற்று நடந்த சம்பவம் கருத்து வேறுபாடு இல்லை. இது ஒரு மோசமான நிகழ்வு. அவர்கள் எதிர்ப்பாளர்கள் இல்லை. அப்படி அழைக்க நாம் துணிய வேண்டாம்.  அவர்கள் ஒரு கலகக்கார கும்பல். கிளர்ச்சியாளர்கள். உள்நாட்டு பயங்கரவாதிகள்.

பிளாக் லைவ்ஸ் மேட்டரின் ஒரு குழு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தால், யாரும் என்னிடம் சொல்லிவிட முடியாது, கேபிட்டலைத் தாக்கிய குண்டர்களின் கும்பலை விட அவர்கள் மிகவும் வித்தியாசமாக நடத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.அது தான் உண்மை என்று நாம் அனைவரும் அறிவோம். அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

25 வது திருத்தத்தை உடனடியாக செயல்படுத்துவதன் மூலம் ஜனாதிபதியை நீக்க வேண்டும் என்று துணை ஜனாபதியை கேட்டுக்கொள்கிறேன் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்தார்.

Next Story