அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும்வடகொரியா மீதான வெறுப்பு பார்வை மாறப்போவதில்லை; கிம் ஜாங் அன் சொல்கிறார்


அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும்வடகொரியா மீதான வெறுப்பு பார்வை மாறப்போவதில்லை; கிம் ஜாங் அன் சொல்கிறார்
x
தினத்தந்தி 9 Jan 2021 9:03 PM GMT (Updated: 9 Jan 2021 9:03 PM GMT)

அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வடகொரியா மீதான வெறுப்பு பார்வை மாறப்போவதில்லை என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறினார்.

பியாங்யாங், 

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக உரசல் போக்கு நீடிக்கிறது. இதை சரி செய்ய இரு நாட்டுத் தலைவர்களும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

இந்தநிலையில் அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வடகொரியா மீதான வெறுப்பு பார்வை மாறப்போவதில்லை என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறினார்.

தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்று வரும் ஆளும் கட்சி மாநாட்டில் உரையாற்றிய கிம் ஜாங் அன் இதுபற்றி கூறியதாவது:- வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கும் இடையில் புதிய உறவுகளை ஏற்படுத்துவதற்கான முக்கிய அம்சம் அமெரிக்கா தனது விரோத கொள்கையை வட கொரியாவில் இருந்து திரும்பப் பெறுகிறதா என்பதை பொருத்தே உள்ளது. ஆனாலும் அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வடகொரியா மீதான வெறுப்பு பார்வை மாறப் போவதில்லை என்பது தெளிவாக உள்ளது.

எனவே எதிரிகளை சமாளிக்க வடகொரியா தனது ராணுவ மற்றும் அணுசக்தி திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

எதிரிகளின் அதிநவீன ஆயுதங்கள் முன்னெப்போதையும் விட அதிகரித்து வருவதை நாம் தெளிவாக காணும் நேரத்தில், நம் சக்தியை அயராது வலுப்படுத்தாமல் எளிதான அணுகுமுறையை கொண்டிருப்பதை விட வேறு எதுவும் முட்டாள்தனமாகவும் ஆபத்தானதாகவும் இருக்காது.

உண்மை என்னவென்றால் கொரிய தீபகற்பத்தில் நாம் தொடர்ந்து நமது தேசிய பாதுகாப்பை கட்டமைத்து அமெரிக்க ராணுவ அச்சுறுத்தல்களை அடக்கும் போது அமைதியையும் செழிப்பையும் அடைய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story