பாகிஸ்தான் மின் தடை: அலட்சியமாக செயல்பட்டதாக 7 அதிகாரிகள் இடை நீக்கம்


பாகிஸ்தான் மின் தடை: அலட்சியமாக செயல்பட்டதாக 7 அதிகாரிகள் இடை நீக்கம்
x
தினத்தந்தி 11 Jan 2021 12:59 AM GMT (Updated: 11 Jan 2021 12:59 AM GMT)

மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தான் முழுவதும் இருளில் மூழ்கியது.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குத்து மின் உற்பத்தி நிலையம் உள்ளது. நாட்டின் பிரதான மின் நிலையங்களில் ஒன்றான இங்கு உற்பத்தி மற்றும் வினியோக அமைப்பில் நேற்று முன்தினம் இரவு 11.40 மணியளவில் திடீரென மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட இந்த கோளாறு காரணமாக, அது தானாகவே செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. அமைப்பின் அலைவரிசை 50-ல் இருந்து பூஜ்ஜியத்துக்கு வந்து விட்டது.இதனால் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இருளில் மூழ்கியது. குறிப்பாக தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், முல்தான் உள்ளிட்ட பெரு நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஒரே நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பாகிஸ்தான் முழுவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்த இந்த மின்சார துண்டிப்பால் அந்த நள்ளிரவில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மின்சார வினியோகத்தை சீரமைப்பதற்காக உயர் வல்லுனர்கள், என்ஜினீயர்கள் கொண்ட குழுவினர் களத்தில் இறங்கினர். இந்த பணிகள் நீண்ட நேரமாக நடந்தது. இதன் பயனாக ஓரிரு இடங்களில் முற்றிலுமாகவும், சில பகுதிகளில் பாதியளவுக்கும் மின் வினியோகம் சீரடைந்தது. இந்த சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக மின்சாரத்துறை மந்திரி உமர் அயூப் கான் தெரிவித்தார்.


இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘இந்த திடீர் கோளாறு காரணமாக 10,320 மெகாவாட் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதை நாம் அடுக்கு விளைவு என்று கூறுவோம். மின்நிலைய பாதுகாப்பு அமைப்பின் அலைவரிசை பூஜ்ஜியத்துக்கு வந்தது இதுவே முதல் முறையாகும்’ என தெரிவித்தார். இந்த திடீர் முடக்கம் குறித்து பிரதமர் இம்ரான்கானுக்கு எடுத்துரைத்து இருப்பதாக கூறிய அயூப்கான், நாடு முழுவதும் மின்சார வினியோகம் சீரடைய இன்னும் நேரம் தேவைப்படும் எனவும் கூறினார்.

குத்து மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள வினியோக அமைப்பு பழமையானது எனக்கூறிய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஷிப்லி பராஸ், இதை முந்தைய அரசுகள் புறக்கணித்ததே இந்த பிரச்சினைக்கு காரணம் என குற்றம் சாட்டினார். இதற்கிடையே, பணியின் போது  அலட்சியமாக செயல்பட்டதாக 7 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து  பாகிஸ்தான் மத்திய மின்சார விநியோக நிறுவனம்  நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story