கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு : சர்வதேச நிபுணர்கள் குழு வியாழக்கிழமை சீனா செல்கிறது


கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு : சர்வதேச நிபுணர்கள் குழு வியாழக்கிழமை சீனா செல்கிறது
x
தினத்தந்தி 11 Jan 2021 10:14 AM GMT (Updated: 11 Jan 2021 10:14 AM GMT)

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு நடத்த -உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர்கள் குழு வியாழக்கிழமை சீனாவுக்கு செல்கிறார்கள்.

பெய்ஜிங்,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகெங்கிலும்  19 லட்சத்துக்கும்   அதிகமான மக்கள் மரணமடைந்து உள்ளனர். அதே நேரத்தில் 9 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பிறப்பிடம் சீனாவாக இருக்கும் நிலையில், அந்த வைரசின் தோற்றம் குறித்து அங்கு சென்று விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

 இந்த விசாரணைக்காக சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு அமைத்து உள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள நிபுணர்களின் பெயர் பட்டியலை சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு அளித்துள்ளது. எனினும், இந்தக் குழுவினரை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதை சீனா இழுத்தடித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அதிருப்தி தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சர்வதேச நிபுணர் குழுவை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. நிபுணர்குழுவை உகான் நகருக்கு வரவேற்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள சீனா, 

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பின் சர்வதேச  நிபுணர்குழு வியாழக்கிழமை சீனா செல்ல உள்ளனர்.

இது குறித்து சீனா தரப்பில் கூறப்படுவதாவது:-

பத்து உலக சுகாதார அமைப்பின்  விஞ்ஞானிகள் இணைந்து செயல்படுவார்கள் . சீன விஞ்ஞானிகளுடன் அவர்கள் கொரோனா வைரஸ்  தோற்றம் குறித்து கூட்டு ஆராய்ச்சி  மேற்கொள்ளுவார்கள். சீனாவில் சர்வதேச நிபுணர் குழுவின் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, நாங்கள் தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்வோம். வைரசின்  தோற்றத்தைக் கண்டுபிடிப்பது  நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது என்று கூறினார்.

Next Story